காஷ்மீர் வன்முறை: 3-வது நாளாக தொடரும் போராட்டம் 23 பேர் பலி

Last Updated : Jul 11, 2016, 12:38 PM IST
காஷ்மீர் வன்முறை: 3-வது நாளாக தொடரும் போராட்டம் 23 பேர் பலி title=

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முப்தி முதல்–மந்திரியாக பதவி வகிக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.  முழுஅடைப்பின் போது மாநிலத்தில் பல நகரங்களில் பர்கான் வானியின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை ஏற்பட்டது. 

அனந்தநாக் மாவட்டத்தில் பண்டிபோரா, குவாசிகுந்த், லார்னு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன.  இந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. 3-வது நாளாக இன்று இயல்பு வாழ்க்கை முடங்கியது. 

இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஸ்ரீநகரில் மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையும் 3-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டது. சையது அலி ஷா கிலானி, மிர்வாய் உமர் பரூக், முகம்மது யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Trending News