ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீ வைக்க முயன்ற கும்பலை விரட்டியடிக்க வானை நோக்கி பாதுகாப்பு படையினர் பல முறை துப்பாக்கியால் சுட்டனர். தெற்கு காஷ்மீரின் கோகர்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதி புர்ஹான் வானி நேற்று கொல்லப்பட்டார். அவருடன் வேறு 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அவரது இறுதி சடங்கு இன்று நடந்தது. இதில், பெருமளவிலான இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களில் பலர், விடுதலைக்கான கோஷங்களை எழுப்பியபடியும், கற்களை வீசியும் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படையினரில் வாகனம் சிறிதளவு சேதம் அடைந்த நிலையில் அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்வதற்காக பாதுகாப்பு படையினர் வானை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். எனினும், துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கூடுதல் போலீஸ் படையினர் அங்கு உடனடியாக சென்றனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மோதல்கள் உள்ளன என தகவல்கள் வெளியான நிலையிலும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.