கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த மே 20 ஆம் தேதி பதவியேற்று உள்ளார்கள். இந்நிலையில், கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும், மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை சில நிபந்தனைகளுடன் அமல்படுத்துகிறது. ஆண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கீடு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் ‘சக்தி’ திட்டத்தை ஜூன் 11ம் தேதி முதல் அமல்படுத்த கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று வாக்குறுதி அளித்து, மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் நாளில் நடைமுறைக்கு வரும் ஐந்து தேர்தல் உத்தரவாதங்களில் இதுவும் ஒன்று என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அரசின் உத்தரவின்படி, இத்திட்டத்தின் பயனாளிகள் கர்நாடகாவை வசிப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். பெண்களுடன், திருநங்கைகளும் 'சக்தி' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பயனாளிகள் மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும், எந்த மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளிலும் பயணிக்க முடியாது. ராஜஹம்சா, ஏசி அல்லாத ஸ்லீப்பர், வஜ்ரா, வாயு வஜ்ரா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், அம்பாரி, அம்பாரி ட்ரீம் கிளாஸ், அம்பரி உத்சவ் ஃப்ளை பஸ், ஈவி பவர் பிளஸ் போன்ற அனைத்து சொகுசு பேருந்துகளும், இந்த திட்டத்தின் கீழ் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Haunted Railway Stations: இந்தியாவில் உள்ள சில ‘பேய்’ ரயில் நிலையங்கள்!
பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC) மற்றும் கல்யாண கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (KKRTC) ஆகியவற்றால் இயக்கப்படும் பேருந்துகளில் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்று அரசாங்கம் கூறியது.
BMTC தவிர, மீதமுள்ள மூன்று மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களில் -- KSRTC, NWKRTC மற்றும் KKRTC ஆகியவற்றில் 50 சதவீத இடங்கள் ஆண்களுக்கு ஒதுக்கப்படும். பெண் பயணிகள் பயணிக்கும் உண்மையான தூரத்தின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் அரசு திருப்பிச் செலுத்தும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், 'சேவா சிந்து' அரசு போர்டல் மூலம் சக்தி ஸ்மார்ட் கார்டுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். சக்தி ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் வரை, பயனாளிகள் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இலவச பயணச்சீட்டு என்று தகவல் வெளியான நிலையில், கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதனை திட்டவட்டமாக மறுத்தார். கர்நாடக மாநில தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்பதுதான். எனவே இந்த திட்டத்தில் அனைத்து பெண்களும் பயணம் செய்யலாம் என்றார். பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவையும், வரவேற்பையும் இந்த திட்டம் பெற்றுத் தந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனம்... இவர்கள் 30% வரி கட்ட வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ