224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கூட்டணியில் 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதேவேளையில் பாஜக-விடம் 104 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க இன்னும் குறைந்தது 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதனால் தான் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. அப்படி யாரும் தங்கள் பக்கம் வராதபட்சத்தில் குறைந்தது ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்தால் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 208 ஆக மாறிவிடும். அப்பொழுது பாஜக-வால் ஆட்சி அமைக்க முடியும்.
எப்படியாவது கர்நாடகவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக வேலை பார்த்து வருகிறது. அதற்கு சாதகமாக சில பிரச்சனைகள் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வருகிறது. எங்கள் கட்சி அமைச்சர்களின் துறைகளில் மஜத தலைவர்கள் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் குற்றசாட்டி வருகின்றனர்.
அதேவேளையில், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால், காங்கிரஸ் கட்சியினர் செய்யும் செயல்களை கர்நாடகா முதல்வர் குமாரசாமி சகித்துக் கொண்டு வருகிறார். ஆனால் இது ஒருநாள் பெரும் சிக்கலை ஏற்ப்படுத்தும் என மஜத கட்சியினர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய போவதாகவும், அதனால் தான் இந்த 3 எம்எல்ஏ-க்களும் மும்பை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சில அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடகாவில் உள்ள ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் 17 ஜனவரிக்குள் வீழ்ச்சியடையலாம் என்று செய்திகள் பரவின. எதனால் என்றால், பிஜேபி எங்கள் அரசாங்கத்தை சீர்குலைக்க முயல்கிறது. எங்கள் கட்சி 3 எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. ஆனால் அவர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் மற்றும் கர்நாடகா அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியிருந்தார்.
இதுக்குறித்து பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, மும்பை சென்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் எங்கள் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கூறிவிட்டு தான் மும்பை சென்றனர். அதனால் எங்கள் ஆட்சிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும். இந்த அரசாங்கத்தை எப்படி வழிநடத்தி செல்வது எனபது எனக்கு தெரியும். எனவே இதுக்குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
எப்படியோ, கர்நாடகாவில் அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.