வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ள நீரவ் மோடிக்கு எதிராக இண்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடவடிக்கையைத் தவிர்த்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் நீரவ் மோடி.
வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி போலி பாஸ்போர்ட் மூலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பயணித்து வந்ததாக கூறப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நீரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. அதோடு, நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போலி பாஸ்போர்ட்கள் மூலமாக நீரவ் மோடி பல நாடுகளுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியாகின. நீரவ் மோடியின் பாஸ்போர்ட் இரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம் சிபிஐ தெரிவித்தது.
நீரவ் மோடி குறித்து தகவல் தெரிந்தால் இந்தியாவிற்கு தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகமும் தகவல் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ள நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.