மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அசாமில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தலைநகரான குவஹாத்தி மற்றும் திப்ருகார் நகரம் மேலும் உத்தரவு வரும் வரை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. வன்முறை போராட்டங்களை அடுத்து, குவஹாத்தி மற்றும் திப்ருகார் பகுதிகளில் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் போராட்டங்கள் ஓயும் வரை பல விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் அசாமில் 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த முடக்கம் அடுத்த 48 மணி நேரத்துக்கு அமலில் இருக்கவுள்ளது. அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கைக் கடைபிடிக்க மத்திய அரசு இன்று 5,000 துணை ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.