தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைப்புகள் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது!
பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் தொடக்கம் மற்றும் முடிவில் இடம்பெறும் தலைப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக பள்ளிக்கல்வியில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததால் அதற்கு விளக்கமளித்த மத்திய அரசு இந்தி மொழி கட்டாயமாக்கப்படாது என தெரிவித்தது. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில்வே அதிகாரிகள் தகவல் பரிமாற்றத்திற்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பும் கடும் எதிர்ப்பால் நேற்று பின்வாங்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து பொழுதுபோக்கு டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும், கலைஞர்களின் பெயர்களை இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் டைட்டிலில் கட்டாயம் இடம்பெறச்செய்ய வேண்டுமென தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய மொழிகளை மக்களிடைய கொண்டுச்செல்லும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்துவதற்கு பதிலாக பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலத்தை பயன்படுத்தலாமே தவிர, ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடாது எனவும், இதே உத்தரவை திரைப்படங்களுக்கும் பிறப்பித்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.