பாகிஸ்தானிடம் இருந்து இந்திய ராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இணையதளத்தில் வெளியாகியள்ள செய்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த தாக்குதலின் போது 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சந்து பாபு லால் என்ற இந்திய ராணுவ வீரர் பிடிபட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த தகவலை நேற்றே இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய ராணுவ வீரர் நேற்று முன் தினம் நடைபெற்ற ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” போது பிடிபட்டவர் இல்லை எனவும் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த அந்த வீரர் கவனக்குறைவாக எல்லை தாண்டிச்சென்றவர் என்றும் ராணுவம் விளக்கம் அளித்ததுள்ளது.