இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்ததை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது!
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய மாநாடு அதாவது சார்க் (SAARC) மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சார்க் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்ததை இந்தியா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி, இந்தியா சார்க் அமைப்பில் சிறப்பு அழைப்பாளர் இல்லை என்றும், ஒருங்கிணைந்த உறுப்பினர் என்றும் தெரிவித்தார். சார்க் மாநாட்டை அறிவிப்பது அனைத்து உறுப்பு நாடுகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்றும், பாகிஸ்தான் தானாகவே மாநாட்டைக் கூட்டவும் அழைப்பு விடுக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
உறுப்பு நாடுகளுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த பின்னரே சார்க் மாநாட்டுக்கான நாளைத் தீர்மானிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரி தெரிவித்தார்.
இதற்க்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். பின்னர் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால், இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.