சுதந்திர தினம் 2023: தியாகம், வீரம், நாட்டுப்பற்றின் சாட்சியாய் சுதந்திர இந்தியா..வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்

Independence Day 2023: பல ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 15, 2023, 05:53 AM IST
  • சுதந்திரம் என்பது வெறும் சொல்லோடு இல்லாமல், நம் வாழ்விலும், உணர்விலும், உயிரிலும் பின்னிப்பிணைந்துள்ளது.
  • சுதந்திரத்தை சுவாசிப்போம், நாட்டை நேசிப்போம், உலக அளவில் பாரதத்தை பரிமளிக்கச் செய்வோம்.
  • வாழ்க இந்தியா! வளர்க அதன் மக்கள்!!
சுதந்திர தினம் 2023: தியாகம், வீரம், நாட்டுப்பற்றின் சாட்சியாய் சுதந்திர இந்தியா..வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் title=

'பாருக்குள்ளே நல்ல நாடு.. நம் பாரத நாடு' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பாருக்குள் ஒரு புனித பூமியாய், வழிகாட்டியாய், ஆசானாய் நம் இந்தியா விளங்குகிறது. நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். உலகின் பல நாடுகள் நம்மை பாற்று பாடம் கற்கின்றன. பல நாடுகளுக்கு பல வழிகளில் நாம் உதவி செய்து வருகிறோம். உலக நாடுகள் அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் நாம் பல சாதனைகளை செய்து வருகிறோம்.

ஆனால், இந்த நிலைக்கு நாம் வர பல போராட்டங்களை செய்ய வேண்டி இருந்தது என்பதை என்றும் மறக்க முடியாது. இன்று விண்ணை நோக்கி பறக்கும் நம் நாம் ஒரு காலத்தில் அன்னியனுக்கு அடிமைப்பட்டிருந்தோம். ஆகஸ்ட் 15, 1947 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்கான போராட்டம் மிக நீண்டதாகவும் மிக தீவிரமானதாகவும் இருந்தது. நாட்டிற்காகவும், சக குடிமக்களுக்காகவும் பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். சுதந்திர தின நாள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், நமது நாட்டின் வரலாறு, அதன் கலாச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் சாதனைகளை போற்றும் நாளாக அமைகிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.

இன்று இந்திய குடிமக்களாகிய நாம் எந்த வித சலனமும் அச்சமுமின்றி சுதந்திரமாய் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், அந்த சுதந்திரம் நமக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பலரது நாட்டுப்பற்று, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவை நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. பலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தனர்.  மகன், தந்தை, கணவன் என விடுதலை போராட்டத்திற்காக வீட்டை விட்டு சென்றவர்களின் வருகைக்காக காத்திருந்த குடும்பங்களின் கதைகள் இங்கே ஏராளமாக உள்ளன. விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் சொல்லி மாளாத அளவில் இருந்தது.

பரட்டை முடியும், பசித்த வயிறும், பயந்த கண்களும், தோய்ந்த கால்களும், ஏந்திய கைகளும், ஏக்கத்துடன் நெஞ்சமும் கொண்டு இந்தியர் அனைவரும் அந்த காலத்தில் அடிமைகளாய் வாழ்ந்தோம். சொந்த நாட்டில் சொந்த ஊரில் அடிமைகளாய் அலைந்து திரிந்தோம். சிலர் அதை ஏற்றுக்கொண்டனர். பலர் அதை எதிர்த்து நின்றனர்.

பாரதீயம் என்ற எண்ணெயால் பரட்டை முடியை சீவிக்கொண்டனர். சுந்தந்திர சிந்தனையால் பசித்த வயிறுகளை நிரப்பிக் கொண்டனர். விடுதலை வெறியால், தங்கள் கண்களில் இருந்த அச்சத்தை ஆங்கிலேயரின் கண்களுக்கு அனுப்பி வைத்தனர். தோய்ந்த கால்களை வலிமைவாய்ந்த கால்களாக மாற்றினர். உதவி கேட்டு எந்திய கைகளை உரிமை கேட்க வைத்தனர். ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கத்தைப் பற்றி புரிய வைத்தனர். ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.

அஞ்சி வாழ்ந்தால் அடிமைத்தனம் நிலையாகிவிடும் என்பதை புரிந்துகொண்ட மக்கள், குரல் எழுப்பி உரிமை முழக்கம் செய்யத் தொடங்கினர். நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் செய்வதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்ட குட்ட எழுந்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் ஆயுத பலமும், ஆள் பலமும் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களிடம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணமும் நாட்டுப்பற்றும் மட்டுமே இருந்தன. இவற்றையே தங்கள் உந்துசக்தியாக்கி உத்வேகத்துடன் போராடினர்.

மேலும் படிக்க | உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது - ஜனாதிபதி முர்மு

இப்படி பல சிந்தனைகள், பல உறுதிமொழிகள், பல இலக்குகள், பல திட்டங்கள், பல தியாகங்கள், பல போராட்டங்கள் என பல வித சுதந்திர போராட்ட முறைகள் செயலுத்திகளாக இருந்தன. நாட்டின் சுந்ததிரம் மட்டுமே அனைவரது கனவாகவும் இருந்தது. வணிகம் செய்ய வந்தவர்கள் நாட்டின் முதலாளிகளானதை ஏற்க மறுத்தார்கள் நாட்டுப்பற்று மிக்க இந்தியர்கள். இறுதியாக, பலரது தியாகத்தின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றது.  சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். படிக்கும்போதே நம் மனம் பதபதைக்கிறது. ஆனால், நம் நாட்டவர் இதை வாழ்க்கையாய் வாழ்ந்துள்ளார்கள். அதை சற்று எண்ணிப்பார்த்தால், அப்படி போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பது புரியும்.

சுதந்திர இந்தியாவில் இன்றும் பல விதங்களில் நாம் தனித்தனியாகத் தான் இருக்கிறோம் என்பது வேதனை அளிக்கின்றது. நமது வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகமே வியந்து போனாலும், ஜாதி, மொழி, இனம், நிறம் என இன்னும் புதிய பிளவுகளை வகுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். பிரிவுகளை தாண்டி பாசம் பிறக்கட்டும். தன்னலத்தை தாண்டி நேசம் நிலைக்கட்டும். 

இன்றைய நிலையில், உலக அளவில் மறுக்க முடியாத சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது. அறிவியல், ஆராய்ச்சி, பொருளாதாரம், விண்வெளி, ஆன்மீகம், மருத்துவம், கல்வி, விளையாட்டு என நாம் பரிமளிக்காத துறைகள் இல்லை என்றே சொல்லலாம். தினம் தினம் பல மைல்கல்லை எட்டி வருகிறோம், பல சாதனைகளை செய்து வருகிறோம். பல எல்லைகளை நாம் தொட்டுவிட்டாலும், இன்னும் எட்ட வேண்டிய இலக்குகள் பல உள்ளன. ஒன்றாக இணைந்து அவற்றையும் எட்டுவோம்.

பாரத நாடு பழம்பெரும் நாடு. பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகுக்கு ஆசானாய், மனித குலத்துக்கு எடுத்துக்காட்டாய், பொறுமையின் பிறப்பிடமாய், துணிச்சலில் இருப்பிடமாய், அன்பின் அன்னையாய், துணிவின் தந்தையாய், உழைப்பின் உதாரணமாய், வளர்ச்சியின் வழிகாட்டியாய் பிரபஞ்சத்தில் பிரகாசிக்கும் நாடு இந்தியா!! இன்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரம் என்பது வெறும் சொல்லோடு இல்லாமல், நம் வாழ்விலும், உணர்விலும், உயிரிலும் பின்னிப்பிணைந்துள்ளது.  சுதந்திரத்தை சுவாசிப்போம், நாட்டை நேசிப்போம், உலக அளவில் பாரதத்தை பரிமளிக்கச் செய்வோம். வாழ்க இந்தியா! வளர்க அதன் மக்கள்!!

மேலும் படிக்க | சுதந்திர தினவிழா: ஒரு செல்பி-க்கு ரூ.10000 கொடுக்கும் மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News