புது தில்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் மாதம் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி வரம்பு ஐந்து லட்சம் வரை சலுகை இருக்கும் என தகவல்.
இந்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இடைக்காலப் பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இன்னும் நான்கு மாதங்களே மோடி அரசு செயல்படும். எனவே மோடி அரசின் கடைசி பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதற்க்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் எனத் தகவல்கள் வந்துள்ளது.
தற்போதைய வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சத்திலிருந்து அதிகரிக்கப்படலாம். தற்போது ரூ. 2.5 லட்சம் வருமானம் பெறுவோர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. வருடாந்திரம் ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர்களுக்கு 5 சதவீதம் வரியும், வருடாந்த வருமானம் ரூ.5 லட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர்களுக்கு 20 வீதமாகவும், வருடாந்திரம் 10 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான வருவாய் ஈட்டுபவர்களுக்கு வருமானத்தில் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். அதேபோல 80 வயதுக்கு அதிகமான குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு 80C அடிப்படையின் கீழ் முதலீட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனிநபர் வருமான வரி விலக்கை 3 லட்ச ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை இந்திய சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FICCI) பரிந்துரைத்துள்ளது. மேலும் இதன்மூலம் தனிப்பட்ட சேமிப்புகள் உயரும் எனவும் தெரிவித்துள்ளது.