இரவு முழுக்க பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது!!

Last Updated : Jul 1, 2019, 10:17 AM IST
இரவு முழுக்க பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! title=

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது!!

மும்பையில் விடாது கொட்டித் தீர்க்கும் கனமழையால், ஏராளமான இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

நேற்றிரவு 11.30 மணி தொடங்கி, இன்று அதிகாலை 5.30 மணி வரை மும்பையில், 6.3 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாக காட்சி அளிக்கிறது. கார்கர், சீயோன், கிங் சர்க்கிள், கிழக்கு தாதர் ஆகிய இடங்களில் கொட்டித் தீர்த்து வரும் மழையால், சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

மழைநீர் தேங்கி உள்ளதால், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், பாதி மூழ்கி ஊர்ந்த வண்ணம் செல்கின்றன. பள்ளிக் குழந்தைகள் குடைபிடித்த வண்ணம், முழங்கால் அளவு நீரில் நடந்து செல்கின்றனர். தண்டவாளங்கள் முழுவதும் மூழ்கி உள்ளதால், சீயோன், மடுங்கா ரயில் நிலையங்களில், ரயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழை பெய்துள்ளது. தற்போது, ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும், மேற்கு ரயில்வே பயணிகள் விசாரணைக்கு உதவி எண்களையும் வெளியிடுட்டுள்ளது. பால்கர் ரயில் நிலையத்தில் தண்ணீர் அளவின் பதிவினையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கர்ஜாத் மற்றும் லோனாவாலா இடையேயான காட் பிரிவில் ஜம்ப்ரங் மற்றும் தாகூர்வாடி இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 1 திருப்பி விடப்பட்டுள்ளன, 2 ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வாரத்தின் முதல் நாளான இன்று, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் என பலதரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சர்ச்ஃகேட் - மரைன் லைன்ஸ் வழித்தடம் இடையே கட்டுமானம் சரிந்ததால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 

 

Trending News