மோடி ஆட்சியில், ஐ.நா சபையில் லடாக் பற்றி பேசப்படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது என அத்தொகுதி எம்.பி பேசியுள்ளது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பரபரப்பு இன்றளவும் ஓயாமல் இருந்து வருகிறது. இதனிடையே இவ்விவகாரம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்ங்யால் (Jamyang Tsering Namgyal) பேசியது பலத்த வரவேற்ப்பை பெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா என்று பலரும் அவரது பேச்சை பாராட்டினர். காஷ்மீரிகளால் லடாக் பகுதி மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal on UNSC discussion on Kashmir: I'm happy that due to the decision taken under Modi ji's leadership, Ladakh is being discussed in UN. Earlier when Congress was in power, Ladakh was not even discussed in Parliament let alone the UN. pic.twitter.com/BaDDbLgBm1
— ANI (@ANI) August 17, 2019
இந்நிலையில்., ஐநா பாதுகாப்பு சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. சுமார் 54 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால் சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த லடாக் எம்.பி நம்ங்யால், “பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக லடாக் பிரச்னை தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரை எதிரொலித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசுகளில் நாடாளுமன்றத்தில் கூட லடாக் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதில்லை.
தன் நிலம் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதனால் அண்டை நாடுகளுக்கு பிரச்னை இருந்தால், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. லடாக் என்பது இந்தியாவின் ஒரு பகுதி” என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஆளும் பாஜக அரசு இந்த பிரச்சனை ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதையே விரும்பவில்லை. மேலும், இதற்கு முன்னர் பிரதமர் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றதை இன்று வரை பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால், லடாக் எம்.பி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், லடாக் பற்றி விவாதிக்கப்பட்டதற்கு பெருமைப்படுவது போல கருத்து தெரிவித்துள்ளது சொந்த கட்சியினருக்கு ஷாக் ஆக அமைந்தது.
மேலும், மோடி நடவடிக்கையால் ஐ.நாவில் லடாக் பிரச்னை விவாதிக்கப்பட்டது என்று நம்ங்யால் கூறியது அக்கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.