நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது!!
டெல்லி: டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருதை வழங்கினார். இதேபோல், சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமிய மொழி பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணி ஆற்றியதற்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மேலும், அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா சார்பில் அவரது மகன் தேஜ் ஹசாரிக்காவும், நானாஜி தேஷ்முக் சார்பில் தீனதயாள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வீரேந்திரஜித் சிங் பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்டனர். பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தார்.
Delhi: Former President Pranab Mukherjee receives 'Bharat Ratna' from President Ram Nath Kovind. pic.twitter.com/j9VmBbNEoP
— ANI (@ANI) August 8, 2019
மேற்கு வங்காளத்தில் சுதந்திரப் போராளிகளின் வீட்டில் 1935 இல் பிறந்த முகர்ஜி, 1969 ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் இறங்க முடிவு செய்வதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக பணியாற்றினார். முகர்ஜி காங்கிரஸ் அமைச்சராக மாநிலங்களவையில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 முதல் 1995 வரை வர்த்தக அமைச்சர், 1995 முதல் 1996 வரை வெளிவிவகார அமைச்சர், 2004 முதல் 2006 வரை பாதுகாப்பு அமைச்சர், 2006 முதல் 2009 வரை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல முக்கியமான அமைச்சர்களை அவர் வகித்துள்ளார்.
அவர் ஜூலை 25, 2012 அன்று இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பதவி விலகியபோது 2009 முதல் 2012 வரை நிதியமைச்சராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.