இறந்த பசுவின் தோலை அகற்றியதற்காக இரண்டு தலித் சகோதரர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. குஜரத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்று மிகப்பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் அருகேயுள்ள உப்பலாப்புரம் கிராமத்தில் சமீபத்தில் ஒரு பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவருக்கு சொந்தமான அந்த பசு இறந்த பின், அதை வாங்கிய மோகட்டி ஈயய்யா மற்றும் அவரது சகோதரரான கோஹட்டி வெங்கடேஷ் என்பவர்கள் பசுவின் தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்த ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர், அந்த தலித் சகோதரர்களை மரத்தில் கட்டிவைத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய கும்பலில் இருவரின் அடையாளம் தெரிந்துள்ளது.
பசுமாட்டின் தோலை உரித்ததாக தலித் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.