பாதிக்கப்பட்ட கேரளத்தினை மீட்டெடுக்கும் பணியில் பொதுமக்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டதாவது...
வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை அவர்களது இருப்பிடம் தேடி சென்று செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
வெள்ளத்தில் வாகனங்களை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டினை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட இன்சுரன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருகிறது.
நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் வீடு திரும்புகையில் அவர்களுக்கு ரூ.10000 வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் கூடிய விரைவில் இந்த பணம் செலுத்தப்படும்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குப் பிந்தைய கணக்கெடுப்பின் படி, கேரள வெள்ளத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 322-ஆக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 1093 நிவாரண முகாம்களில் இதுவரை 342699 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை கொள்முதல் செய்வதில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் குப்பைகளை கடல், ஆற்றுப் பகுதிகளில் எறிவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரை தூய்மைப் படுத்தி மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசிற்கு பொதுமக்கள் ஆதரவினை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.