டெல்லி: 2019 மக்களவை தேர்தலின் ஐந்து கட்டங்கள் முடிந்து, இன்னும் இரண்டு கட்டங்கள் உள்ள நிலையில் மூன்றாவது அணி குறித்த செய்திகள் மீண்டும் ஊடகங்களில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து மாநில கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் பணியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், தற்போது மீண்டும் மூன்றாவது அணி திட்டத்தை கையில் எடுத்த கே.சந்திரசேகர் ராவ், நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியார்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதை குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னுடன் விவாதித்தார். தேசிய அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தேசிய அரசியலில் மாநில அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் மத்திய அரசு செயல்பட வேண்டிய நிலை ஏற்ப்படும். இனி மத்திய அரசு மாநில அரசுகளை ஏமாற்ற முடியாது. மூன்றாவது அணி குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.