ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மருந்து விற்பனையினை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவில்... ஆன்லைன் மருந்து விற்பனை மூலம் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே காலாவதியான, போலியான மருந்துகள் மக்களை சென்றடையும் ஆபத்துள்ளது, மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி., ஆன்லைன் மூலம் மருந்து விற்க இரண்டு வாரம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று, நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தடை விதிப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்கப்படுவதாகவும், இதனால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தனர். மேலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்து விற்பனை சங்கத்தினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.