உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின்படியே தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி S.முரளீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி S.முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை (பிப்.,27) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "நன்கு தீர்க்கப்பட்ட செயல்முறை பின்பற்றப்பட்டது" மற்றும் முழு விஷயமும் காங்கிரஸ் கட்சியால் அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் 12.02.2020-இல் பரிந்துரைத்ததன் அடிப்படையிலேயே நீதிபதி முரளீதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யும்போது நீதிபதியின் கருத்தும் பதிவு செய்யப்படும். சரியான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான பணியிட மாற்றத்தை அரசியலாக்கியிருப்பதன் மூலம், நீதித் துறை மீது காங்கிரஸ் கொண்டுள்ள மிகக் குறைவான மதிப்பையே இது வெளிப்படுத்துகிறது" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Transfer of Hon’ble Justice Muralidhar was done pursuant to the recommendation dated 12.02.2020 of the Supreme Court collegium headed by Chief Justice of India. While transferring the judge consent of the judge is taken. The well settled process have been followed.
— Ravi Shankar Prasad (@rsprasad) February 27, 2020
செவ்வாயன்று வடகிழக்கு டெல்லியில் வன்முறை தலைவிரித்தாடிய நிலையில், நள்ளிரவில் அது குறித்த அவசர வழக்கை, உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் தனது வீட்டில் விசாரித்தார். அப்போது ஒரு மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்த 22 பேரைப் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறை தொடர்பான படக் காட்சிகளைப் பார்வையிட்ட அவர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இது நீதித்துறை மீதான பாஜக அரசின் தலையீடு எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிபதி பணியிட மாற்றத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பிப்ரவரி 12ஆம் தேதி பரிந்துரைத்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கமான பணியிட மாற்றத்தை அரசியலாக்கும் காங்கிரஸ் கட்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதில் ஒரு சாதனையே படைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.