பெங்களூரு: திப்பு ஜெயந்தியின் போது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்த பின்னர், நாங்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து என்ற முடிவை எடுத்துள்ளோம் என கர்நாடகா முதல் அமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஒருவருடமாக செயல்பட்டு வந்த குமாராசாமி தலைமையிலான அரசுக்கு சட்டபேரவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மை நிருபித்து ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதல் அமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.
முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையில் திங்களன்று (ஜூலை 29) பாஜக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தின் முதல் அமைச்சரான எடியூரப்பா, "இனி கர்நாடகாவில் கன்னட மொழி மற்றும் கலாச்சார துறை சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படாது என அறிவித்தார். திப்பு ஜெயந்தியின் போது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்த பின்னர், நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, திப்பு விழா கொண்டாட்டத்தை நான் தொடங்கினேன். என் பார்வையில், திப்பு சுல்தான் முதல் சுதந்திர போராட்ட வீரர். அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். பாஜக மதச்சார்பற்றவர்கள் அல்ல என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. பாஜக அரசு வந்தால் இது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நாங்கள் தொடர்ந்து அதை எதிர்ப்போம். சட்டசபையில் எந்த அமைச்சரவையும் இப்போது இல்லை. முதல்வர் தனியாக இருக்கிறார், அதனால் தான் அத்தகைய முடிவை எடுத்துள்ளார் எனக் கூறினார்.
ஒரு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.