குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் என காங்கிரஸ் MP ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் குடியுரிமை திருத்த மசோதாவினை ஆதரிக்கும் எவரும் நம் தேசத்தின் அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், இந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிராஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, "குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டார். மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை" விளக்கம் அளித்தார்.
அந்த விளக்கத்தில்..... குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இந்த மசோதாவில், 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிராக ஏதும் குறிப்பிடும் வகையில் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
The #CAB is an attack on the Indian constitution. Anyone who supports it is attacking and attempting to destroy the foundation of our nation.
— Rahul Gandhi (@RahulGandhi) December 10, 2019
இந்நிலையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (திருத்த) மசோதா குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல். குடியுரிமை திருத்த மசோதாவினை ஆதரிக்கும் எவரும் நம் தேசத்தின் அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.