நாசாவின் LRO ஆர்பிட்டர் விக்ரமின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்க உள்ளது!!
நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்துள்ளது. நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். நாசாவின் விண் ஆய்வு நிலையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு ஹலோ சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
நேற்றிரவு இந்த ஆய்வுகளின் மற்றொரு முயற்சியாக நாசாவின் ஆர்பிட்டர் மூலம் நிலவில் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை சரியாக கணிக்கும் வகையில் படம் எடுக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். நேற்றிரவு நாசா எடுத்த புதிய படங்களை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.