குரேஷி வழக்கில் ராகேஷ் அஸ்தனாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் லஞ்ச புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இருவரையும் அழைத்துப் பேசினார்.
இதனையடுத்து, அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாயா விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. கடந்த 23 ஆம் நாள் நள்ளிரவு 2 மணியளவில் சிபிஐ-யின் புதிய இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது மத்திய அரசு. சிபிஐ விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது என்று எதிர்கட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் நடவடிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் பதவி நீக்கம் செய்யவில்லை. அவர்கள் பதவியில் தொடருகிறார்கள். ஆனால் மத்திய ஊழல் கண்காணிப்பு பரிந்துரையின் அடிப்படையில் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர் எனக் கூறியது.
மத்திய அரசில் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலோக் வர்மா. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் இதுவரை மேற்க்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
கடந்த திங்கள்கிழமை நீதிபதி ஏ.கே பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதேபோல தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு பெஞ்ச், "மத்திய அரசாங்கத்துக்கு ஆட்சேபனை இல்லை என்றால், சி.வி.சி அறிக்கை மனுதாரரிடம் ஒப்படைக்கப்படலாம். மனுதாரர் அறிக்கையின் ரகசியத்தை காக்க வேண்டும். அதேபோல ஆலோக் வர்மாவிடம் இன்னும் விசாரிக்க வேண்டும் என்பதால் கால அவகாசம் கேட்டுள்ளது சி.வி.சி (மத்திய புலனாய்வு ஆணையம்). சி.வி.சி. விசாரணை அறிக்கையில் கலவையானதாக உள்ளன. அலோக் வர்மாவிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்ய அவசியம் இருக்கிறது.
சி.வி.சி.யின் அறிக்கையை இருதரப்பும் விவாதித்து வரும் 19 ஆம் தேதி பதில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி கூறினார்கள்.