காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து தெரிவித்து கர்நாடகத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதை கண்டித்து கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவருடைய கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். வாட்டாள் நாகராஜ் உள்பட போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:- தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டுள்ளதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் வருகிற 19-ம் தேதி கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருமாநில எல்லை நுழைவு பகுதியை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம்.
நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். பெங்களூருவில் நடந்த கலவரத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதை நிறுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என அவர் கூறினார்.