உ.பி.,யில் பாஜக-வுக்கே வெற்றி வாய்ப்பு: சர்வே

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகளை இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 5, 2017, 10:29 AM IST
உ.பி.,யில் பாஜக-வுக்கே வெற்றி வாய்ப்பு: சர்வே title=

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகளை இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் உ.பி.,யில் தேர்தல் குறித்த கருத்து கணிப்பை நடத்தியது. 

அக்டோபரில் 31 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு பகிர்வு, ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு டிசம்பர் மாதத்தில் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ., 15 சதவீதம் ஓட்டுக்களுடன் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

உ.பி.,யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ., 206 முதல் 216 இடங்களையும், ஆளும் சமாஜ்வாதி கட்சி 92 முதல் 97 இடங்களையும், மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 79 முதல் 85 இடங்களையும், காங்கிரஸ் 5 முதல் 9 இடங்களையும் பிடிக்கும். ராஷ்டிரிய லோக்தளம், அப்னா தள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 7 முதல் 11 இடங்களை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளை பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வந்தாலும், யார் முதல்வராக வரவேண்டும் என கேள்விக்கு அகிலேஷே மீண்டும் முதல்வராக வரவேண்டும் என 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர்களில் ராஜ்நாத் சிங்கிற்கு 20 சதவீதம் பேரும், யோகி ஆதித்யானந்த்திற்கு 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Trending News