வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 5, 2024, 06:33 PM IST
  • ஒடிசாவில் 24 ஆண்டுகாலம் முதல்வராக தொடர்ந்த நவீன் பட்நாயக் தோல்வி
  • ஒடிசாவில் 78 இடங்களை பாஜக கைப்பற்றியது.
  • வி.கே. பாண்டியனை வைத்து பல கதையாடல்களை பாஜக பிரச்சாரத்தில் பயன்படுத்தியது.
வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை! title=

VK Pandian Odisha Election Result 2024: நடந்து முடித்த மக்களவை தேர்தல் (Lok Sabha Election Result 2024) முடிவுகள் நேற்று (ஜன் 5) வெளியான நிலையில், அது பல அதிர்ச்சி முடிவுகளை அளித்துள்ளது எனலாம். பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை, யாருமே எதிர்பார்க்காத அளவில் இந்தியா கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன, ஒடிசாவில் 24 ஆண்டுகாலம் முதல்வராக தொடர்ந்த நவீன் பட்நாயக் வீழ்ச்சி கண்டுள்ளார். அவரின் பிஜூ ஜனதா தளம் சுமார் 4 சதவீத வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது. 

ஆட்சியமைக்கும் பாஜக

இதில் முதலிரண்டு விஷயங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், நவீன் பட்நாயக் (Naveen Patnaik) தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் தோல்வி என்பது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளும் கட்சிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது என்பதே நிதர்சனமானதாகும். பாஜக அடிமேல் அடி அடித்து அங்கு பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 

ஒடிசாவில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளில் (Odisha Assembly Election 2024) 78 இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கிறது. மக்களவையில் 21இல் 20 தொகுதியில் பாஜக கைப்பற்றி நவீன் பட்நாயக்கிற்கு பெரும் அடியை கொடுத்துள்ளது. ஒடிசா பிரதமர் மோடி (PM Modi) பிரச்சாரம் செய்தபோதே, முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். நேற்று பாஜக வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் மோடியும் கூட,"மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும், ஒடிசாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதிலும் பாஜக கடுமையாக செயலாற்றும், நன்றி ஒடிசா" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!

தோல்விக்கு என்ன காரணம்?

இந்தளவிற்கு பிஜூ ஜனதா தளம் (Biju Janata Dal) தோல்வியை தழுவ பல காரணங்கள் இருக்கின்றன. ஆட்சிக்கு எதிரான மனநிலை, நவீன் பட்நாயக்கின் வயது மற்றும் அவரது உடல்நிலை குறித்த பேச்சுகள் ஆகியவை இதில் தாக்கம் செலுத்தியிருக்கும் என்றாலும் வி.கே. பாண்டியனை வைத்து பாஜக மேற்கொண்ட பிரச்சாரமும் அக்கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது எனலாம். தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி. கார்த்திகேய பாண்டியன் பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டார். 

நவீன் பட்நாயக்கிற்கு பிறகு வி.கே பாண்டியன்தான் (VK Pandian) முன்னிலைப்படுத்தப்படுவார் என பேச்சுக்கள் வர தொடங்கின. தற்போதே திரைமறைவில் வி.கே. பாண்டியன் தான் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்றும் பேச்சுகள் வந்தன. அதுவும் குறிப்பாக, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவும் கூட பிரச்சாரத்தின்போது, ஒடிசாவை ஒரு தமிழர் ஆள்வதா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தார். அதுமட்டுமின்றி, ஒரு மேடையில் பேசிக்கொண்டிருந்த நவீன் பட்நாயக்கிகன் கைகள் உதறியதை பார்த்து, அவருக்கு மைக் பிடித்துக்கொண்டிருந்த வி.கே பாண்டியன் கேமராவின் கண்களில் இருந்து மறைத்தார். 

பாஜக உருவாக்கிய கதையாடல்

இந்த வீடியோ பதிவிட்ட பாஜகவினர், நவீன் பட்நாயக்கை எந்தளவிற்கு வி.கே. பாண்டியன் கட்டுப்படுத்துகிறார் என்று பாருங்கள் என கொந்தளித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். பாஜக இதை தொடர்ந்து நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்த கேள்வியையும் எழுப்பியதால், நவீன் பட்நாயக்கே அதற்கு பதிலடியும் கொடுத்திருந்தார். ஆனால், பாஜகவின் பிரச்சாரத்தால் நவீன் பட்நாயக்கே, வி.கே. பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கிவிட்டது. அவர் அரசியல் வாரிசு இல்லை என்றாலும் கூட அதை பொதுவெளியில் நவீன் பட்நாயக் அறிவிக்கும் அளவிற்கு பாஜகவின் அந்த பிரச்சாரம் வலுவாக இருந்தது எனலாம். 

வி.கே. பாண்டியனை குறிவைத்து பாஜக சரியான தாக்குதலை மேற்கொண்டு ஒடிசாவில் தனது பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. வி.கே. பாண்டியனால்தான் பாஜக அங்கு வென்றது என சொல்ல முடியாது என்றாலும் அவரை முன்வைத்து பாஜக உருவாக்கி கதையாடலும், பிரச்சார யுக்தியும் கண்டிப்பாக பல இடங்களில் கைக்கொடுத்துள்ளது எனலாம். 

மேலும் படிக்க | உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News