நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
பா.ஜ.க. - காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 18 மாநிலங்களில் பா.ஜ.க., ஆட்சி இருந்தது. இன்று இமாச்சலபிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 19 மாநிலங்களில் 14 மாநிலங்களில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த 14 மாநிலங்களில் 9 மாநிலங்களில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்துகிறது. 5 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் 5 மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.
பா.ஜ.க. தனி பெரும்பான்மை ஆட்சி நடக்கும் 9 மாநிலங்கள் விபரம்:-
அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் அரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்.
கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கும் 5-மாநிலங்கள் விபரம்:-
1. அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு)
2. கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு)
3. ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்)
4. மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்)
5. மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்)
பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி நடக்கும் 5-மாநிலங்கள் விபரம்:-
1. ஆந்திரா (தெலுங்கு தேசம் கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு)
2. பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு)
3. காஷ்மீர் (மக்கள் ஜன நாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு)
4. நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு)
5. சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு)
காங்கிரஸ் கட்சி தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே ஆளும் கட்சியாக உள்ளது.
அந்த 5 மாநிலங்கள் விபரம்:-
கர்நாடகா, பஞ்சாப், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கர்நாடகா, பஞ்சாப் இரு மாநிலங்கள் மட்டுமே பெரிய மாநிலங்களாகும். இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் எப்போதும் வலுவாக இருக்கிறது. நேற்று வெளியான பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
மற்றொரு பெரிய மாநிலமான கர்நாடகா அதிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. - காங்கிரஸ் இரு கட்சிகளும் உச்சக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளன.