மேற்கு வங்க மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்!
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களால் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து மேற்குவங்க மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை ஆலோசிக்க வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை புறக்கணித்த மருத்துவர்கள், என்ஆர்ஆஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு மம்தாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இதனையடுத்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்து விட்டனர்.
மருத்துவர்கள் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே நாளை காலை முதல் 24 மணிநேரம் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு நடத்த முதல்வர் மம்தா எங்கு அழைத்தாலும் செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும், ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என போராடும் பயிற்சி டாக்டர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.