பெங்களூரு புறநகர் மாவட்டம் சர்ஜாபூர் அடுத்த முகலூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்து வந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சர்ஜாபூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போன புகார்களை விசாரித்ததில் கே.ஆர்.புரத்தில் காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபர் சேத்தன் என்பவரின் அடையாளங்களோடு ஆற்றில் கிடந்த சடலம் ஒத்துப்போனது. பின்னர் சேத்தனின் பெற்றோரை வரவழைத்து அடையாளத்தை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
சேத்தன் கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு குறித்து போலீசார் சாரணை மேற்கொண்டனர். அதில் சேத்தனின் செல்போன் எண்ணை கொண்டு விசாரித்த போது அவர் அடிக்கடி சோபா என்ற பெண்ணுடன் பேசியது தெரியவந்தது. உடனே அவரை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அதில் தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. கே.ஆர்.புரா பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றில் சோபா பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது கணவர் பவன்குமாருடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சேத்தன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
இவர்கள் 8 மாதங்களாக தங்கள் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். சோபாவுடன் நெருக்கம் அதிகமானதும், தனது தொழிலை கவனிக்காத சேத்தனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் சோபாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பல கோடி ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார். இந்த தகவலை அறிந்த சோபா அவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். சதீஷ் சோபாவுக்கு சொந்தமாக பியூட்டி பார்லர் வைத்துக்கொடுத்துள்ளார். சதீஷ் பற்றி அறிந்து கொண்ட சேத்தன் சோபாவை எச்சரித்துள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழ சொன்னதாக கூறப்படுகிறது.
சேத்தன் தனக்கு தொந்தரவு செய்து வருவதை இரண்டாவது காதலன் சதீஷ் இடம் ஷோபா சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் ரியல் எஸ்டேட் அதிபர் சேத்தனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சோபா அழைத்ததால் சேத்தன் வந்துள்ளார். அங்கு அவர் முழு போதை ஆனதும், தொட்டமிட்டபடி அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது சர்ஜாபூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு வந்தததும், காரில் இருந்த சேத்தனை வெளியே இழுத்து அவரது தலையில் இரும்பு கம்பியால் சதீஷ் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சேத்தன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை தென்பெண்ணை ஆற்றில் போட்டுவிட்டு சதீஷ், ஷோபா மற்றும் சதீஷின் நண்பர் ஒருவர் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளனர். இந்த தகவல்களை சோபா போலீஸ் விசாரணையில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.