அயோத்தி வழக்கில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது மத்தியஸ்தர் குழு

இன்று மத்தியஸ்தம் குழு இறுதி அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச மன்றத்தில் சமர்ப்பித்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2019, 05:15 PM IST
அயோத்தி வழக்கில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது மத்தியஸ்தர் குழு title=

புதுடெல்லி: இன்று மத்தியஸ்தம் குழு இறுதி அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச மன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து நாளை அயோத்தி வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தரை நியமனம் செய்வது பரிசீலிக்க உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் குழுவை நியமித்து கடந்த மார்ச் 8 தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தக் குழு, முதல் நிலை அறிக்கையை 4 வாரத்தில் அளிக்க வேண்டும். சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும். சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். ஊடகங்களுக்கோ அல்லது வெளியிலோ தகவலை கசியவிடக்கூடாது என மத்தியஸ்தம் குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில், இன்று மத்தியஸ்தம் குழு இறுதி அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச மன்றத்தில் சமர்ப்பித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இடைக்கால அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

அயோத்தி சம்பந்தமான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டதால், நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Trending News