டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்!!
டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருக்கிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தான், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1 ஆம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரியில் நாராயணசாமியைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.