புதுடெல்லி: செவ்வாயன்று (ஆகஸ்ட் 06) மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுப்ரியா சூலே கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஃபாரூக் அப்துல்லாவை தடுத்தும வைக்கப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை என்று கூறினார். அவர் விருப்பப்படி தனது வீட்டில் இருக்கிறார் எனக் கூறினார்.
மக்களவையில் என்.சி.பி எம்.பி. சுப்ரியா சுலே பேசிய போது, "ஃபாரூக் அப்துல்லா என் அருகில் தான் அமர்ந்திருபார். அவர் ஜம்மு-காஷ்மீர மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் மக்களவையில் இல்லை. அவரது குரலும் கேட்கப்படவில்லை. காஷ்மீர் விவாதம் அவர் இல்லாமல் எப்போதும் முழுமையடையாது என ஆவேசமாக பேசினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், "பாரூக் அப்துல்லா கைதும செய்யப்படவில்லை அல்லது அவரை யாரும் தடுத்து வைக்கப்படவில்லை, அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், தனது சொந்த வீட்டில் காவலில் வைக்கப்பட்டு உள்ளார் என விளக்கம் அளித்தார்.
இதற்க்கிடையில் பேசிய சுலே, "ஃபாரூக் அப்துல்லாவின் உடல்நிலை சரியாக இருக்கிறதா? இல்லையா? எனக் கேட்டார். இது குறித்து அமித்ஷா, "அவரின் உடல்நிலையை என்னால் குணப்படுத்த முடியாது, அது மருத்துவரின் வேலை" என பதில் அளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.