புதுடெல்லி: நீதிபதிகள் நியமனம் செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை "தேநீர் விருந்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்" என பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற போகும் நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நீதித்துறையின் மீது பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகள் மீதும், நீதித்துறை மீது பல குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்திய வரலாற்றில் எப்பொழுதும் நடக்காத வண்ணம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து, நீதித்துறையின் சுதந்திரம் நசுக்கப்படுகிற. அரசின் தலையீடு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தனர். இது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்தநிலையில், மீண்டும் அதிர்சியை அளிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில் "உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அடுத்த நீதிபதி நியமிப்பதில் நீதிபதி உறவினர்களுக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது, "உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே மூத்த நீதிபதிகளுக்கு பிடித்த மற்றும் சாதகமாக இருக்கும் நீதிபதிகள் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுமுறை ரகசியமாக நடைபெறுகிறது. அதன் பிறகு தான் அவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் நீதித்துறையில் தனது 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை (National Judicial Appointments Commission) உங்கள் அரசாங்கம் கொண்டுவந்த போது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தங்களது அதிகார வரம்பில் தலையிடுவதாகக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்து, இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.” இதன் மூலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் குடும்ப உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.