லக்னோ: உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கும், அவரது தந்தை மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
போட்டி வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பாக இருவருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டமானது. இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டார்.
மேலும் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக செயல்பட்ட முலாயம் சிங்கின் சித்தப்பா மகனும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவும் சஸ்பெண்ட் செய்யபட்டார்.
இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பெரும் பாலான எம்.எல்.ஏ.க் கள் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மொத்தம் உள்ள 229 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க் களில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம்சிங் யாதவை சந்தித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரும் மந்திரியுமான ஆசம் கானுடன் சென்று அவர் முலாயம்சிங்கை சந்தித்தார். இவர்தான் இருவருக்கும் இடையே உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளபட்டனர்.