புதுடில்லி: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். திங்களன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குச் சென்றபோது, முதல்வரின் செயலாளரான பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் தனது எப்ஐஆரில் குற்றம் சாட்டியிருந்தார். மாநிலங்களவை எம்.பி ஒருவர் முதல்வர் வீட்டிலேயே தாக்கப்பட்டதாக வந்த செய்தி அரசியல் வட்டாரங்களிலும் பொது மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடயில் தில்லி காவல்துறை இன்று முதல்வரின் இல்லத்திலிருந்து அவரது உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணைக்காக அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்து அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பிய போதிலும், காவல்துறையிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பிபவ் குமாரின் வழக்கறிஞர் கூறினார்.
பிபவ் குமாரின் வழக்கறிஞர் கரண் ஷர்மா ANI செய்தி நிறுவனத்திடம், "காவல்துறையினரிடம் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்று அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்." என்று கூறியுள்ளார்.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில், தனது கட்சி எம்பி தாக்கப்பட்டும் அர்விந்த் கெஜ்ரிவால் அமைதியாக இருப்பதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விஷயத்தில் அவரது செயலற்ற தன்மை காரணமாக கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என பாஜக தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து சுவாதி மாலிவால் வெளியே செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதில், டெல்லி முதல்வர் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகின்றது.
பிபவ் குமார் தன்னை மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கால்களால் தாக்கியதாக ஸ்வாதி மலிவால் தனது எஃப்ஐஆர் -இல் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"நான் அதிர்ச்சியில் இருந்தேன். உதவிக்காக மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டிருந்தேன். என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நான் அவரை என் கால்களால் தள்ளிவிட்டேன். அந்த நேரத்தில், அவர் என் மீது பாய்ந்து, கொடூரமாக இழுத்து, வேண்டுமென்றே என் சட்டையை மேலே இழுத்தார்" என்று அவர் எஃப்.ஐ.ஆர். -இல் குறிப்பிட்டுள்ளார். "இதனுடன் நிற்காத பிபவ் குமார், என் மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கால்களால் உதைத்து தாக்கினார்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மா தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். "டெல்லி முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அப்படி பார்த்தால் ஒரு குற்றவாளியாக பார்க்கப்படும் ஒருவருக்கு ஒரு முதல்வர் அடைக்கலம் கொடுத்துள்ளார்" என அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ