பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-Kisan) பயனாளிகளுக்கு பெரிய செய்தி காத்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் அடுத்த தவணை பெற மத்திய அரசு இந்த மாதத்திலிருந்து ஆதார் இணைப்பினை கட்டாயமாக்கியுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ், அடுத்த தவணை ரூ.2,000 ஆனது ஆதார் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே மாற்றப்படும் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாயன்று மக்களவையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பானது தற்போது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கொண்டிருக்கா விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ், நாட்டின் 14 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசு 3 சம தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவியை வெளியிடுகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
---நவம்பர் 30 வரை தள்ளுபடி கிடைத்தது---
டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை முதல் தவணை பெற ஆதார் விருப்பமாக வைக்கப்பட்டது. இருப்பினும், அசாம், மேகாலயா, மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு இதிலிருந்து 2020 மார்ச் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரண்டாவது தவணைக்கு ஆதார் கட்டாயமாக்க முன்மொழியப்பட்டது, ஆனால் ஆதார் இணைப்பு தாமதத்தின் காரணமாக, இந்த விதி 2019 நவம்பர் 30 வரை தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் எழுதப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோமர்., "டிசம்பர் 1, 2019 முதல் தவணை வெளியிட பயனாளி ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகும்," என தெரிவித்திருந்தார்..
--- 7.60 கோடி மக்கள் பயனடைகிறார்கள் ---
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 7.60 கோடி பயனாளிகளுக்கு நவம்பர் 30 வரை அரசு நிதி மாற்றியுள்ளதாக தோமர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் பயனாளிகளுக்கு அரசு ரூ.35,882.8 கோடியை வழங்கியுள்ளது என்றும், விவசாயிகளை பதிவு செய்வதும், இந்தத் திட்டத்திற்குப் பிறகு தவணை மாற்றப்படுவதும் தொடர்ச்சியான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். PM-கிசானின் வலை இணையதளத்தில் சரியான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் பதிவேற்றிய பின்னர் நிதி மாற்றப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., இந்த செயல்பாட்டில் எந்த தவறும் இல்லாமல் பயனாளிகளின் தகவல்களை பதிவேற்றும் வேகம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.