மழைக்காலம் ஆரம்பித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அதனுடன் கூடுதலாக வரும் உடல் உபாதைகள்தான் நம்மை பல சமயம் மழையைக் கூட ரசிக்க விடாமல் செய்து விடுகின்றன. உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு மழையில் நனைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பருவநிலை மாற்றமே சிலரை பாடாய் படுத்தி விடுகிறது.
இந்த காலகட்டத்தில் காய்ச்சல், சளி, உடல் சோர்வு என பல வகை பாதிப்புகள் ஏற்பட்டாலும், நம்மை கடுப்பேத்தும் ஒன்று உண்டு என்றால் அது வறட்டு இருமல்தான். சளியால் வரும் இருமல் ஒரு வகை என்றால் வறட்டு இருமல் வில்லன் வகை. ஆம்!! வறட்டு இருமல் வந்து விட்டால் போதும் சிலருக்கு இருமி இருமியே தொண்டை, வயிறு மற்றும் மார்புப் பகுதிகள் வலிக்க ஆரம்பித்து விடும்.
சுற்றுச்சூழல், ஒவ்வாமை, மாசுபாடு, நச்சுத்தன்மை ஆகியவற்றின் எதிர்விளைவால் பெரும்பாலான வறட்டு இருமல் (Dry Cough) ஏற்படுகிறது. இவற்றால் தொண்டையில் எரிச்சல் உண்டாகிறது.
ஆனால், இந்த வில்லனை அழிக்கும் ஹீரோக்களும் நம்மிடம் உள்ளனர்.
துளசி (Tulsi) அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் கண் கண்ட மருந்து. குறிப்பாக, வறட்டு இருமலுக்கு துளசி சாரை பருகினால் போதும். துளசி மேலோட்டமாக செயல்படாமல் வறட்டு இருமலுக்கான மூல காரணத்தையும் அழித்து இருமலையும் போக்குகிறது.
இரவில் பாலை மிதமாக சூடுபடுத்திக்கொண்டு அதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் காணாமல் போகும்.
11 மிளகை நன்றாக கடித்து மென்று, பின்னர் பொறுக்கும் அளவு சூடான நீரைப் பருகினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
நெய்யில் மிளகு பொடி கலந்து சாப்பிட்டால், வறட்டு இருமல் சரியாவதுடன் அதனால் ஏற்பட்ட ரணமும் குணமாகும்.
உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளிப்பது மிகவும் நல்ல பயன்களைத் தரும். கிரிமி நாசினியான உப்பு, நம் தொண்டைப் பகுதியில் உள்ள கிருமிகளை நீக்கும். கல் உப்பைப் பயன்படுத்துவது நல்லது.
சூடான நீரை வேவு பிடிப்பதும் வறட்டு இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும். வேவு பிடிக்கும் போது, அந்த நீரில் வேப்பிலை, மஞ்சள் பொடி, கல் உப்பு, துளசி ஆகியவற்றை போட்டு வேவு பிடிப்பது மிகுதியான நன்மைகளைத் தரும்.
இஞ்சி தேநீர் (Ginger Tea) பருகலாம். இதில் தேன் கலந்து குடித்தால் நான்கு வேளைகளில் நல்ல வித்தியாசம் தெரியும். தொண்டை, வாய், சுவாசக் குழாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு இஞ்சி கண்கண்ட மருந்தாகும்.
ALSO READ: உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா....? கொரோனாவிலிருந்து ஜாக்கிரதை
இனி வறட்டு இருமல் வந்தால் வருத்தப்படாமல் விரட்டி அடிக்கலாம். வீட்டு சமயலறையில் நமக்கான படை காத்துக்கொண்டிருக்கிறது.
உணவே மருந்து! நல்லுணர்வே விருந்து!!
ALSO READ: ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் டீ விற்பனை: DRM பரிந்துரை