தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையினை வரும் ஜூன் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. பின்னர் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது, இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற கிளை "யார் உத்தரவிட்டது என்று கேட்டால், ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் விசாரணை அமைத்துள்ளதாக பதில் அளிக்கிறீர்கள்" என விமர்சணம் செய்துள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் ஏற்புடையது அல்ல எனவும், வரும் ஜூன் 6-ஆம் தேதி துப்பாக்கி சூரு குறித்த விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
#SterliteShoot...
கடந்த 1996-ம் ஆண்டு துவங்கி தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாள் கடந்த 22-ம் தேதி எட்டியது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான 13 பேரின் உயிருக்கு நியாயம் கோரி போராட்டங்கள் வெடித்த வண்னம் இருக்கையில், மனித உரிமைகள் ஆணையம் வரை இதுத்தொடர்பாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையினை வரும் ஜூன் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது!