விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றனர்.
275 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறையானது பூட்டி சீலிடப்பட்டுள்ளது. அதே போல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் 299 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்லில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாங்குநேரியில் ஓட்டு எண்ணிக்கை அரைமணிநேரம் தாமதமாக துவங்கியது. காலை 8.30 நிலவரப்படி விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 1000 ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்து வருகிறார்.