மக்கள் நலனுக்காக, தான் பலமுறை சிறை சென்றிருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தருமபுரி பொதுகூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தான் மக்கள் நலனுக்காக சிறை சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கடந்த 10ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இன்று தருமபூரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது., "தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிமுக ஆட்சி சட்டவிரோத பேனர் வைத்து மரணத்திற்கு காரணமாகி வருகிறது.
ஒன்றல்ல, பலமுறை சிறை சென்றுள்ளேன். கொலை செய்ததற்காகவோ, கொள்ளை அடித்ததற்காகவோ அல்ல, மக்கள் நலனுக்காக.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல் விமர்சிக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் தான் நடக்கிறது என்பதை ஆளும் கட்சியினர் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் ஊழலின் ஊற்றுக்கண்களாக தங்கமணியும், வேலுமணியும் இருக்கின்றனர். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இருவரையும் இரு கண்களாக பாவித்து வருகிறார். அமெரிக்காவில் துணை முதல்வர் விருது வாங்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவருக்கு ஊழல் மகன் என்ற பட்டம் தான் அளிக்கவேண்டும்.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அவ்களுக்கு தெரியாது, கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் அனுராதா கால் பறிபோனது தெரியாது. ஊழல் செய்வது மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். கடப்பாறையை விழுங்கிவிட்டு ‘கம்’மென இருப்பவர் அவர் என கடுமையாக சாடியுள்ளார்.