சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இத்தேர்தலில், அதிமுக கூட்டணியில், அதிமுகவை தவிர்த்து, 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் திமுகவை தவிர்த்து, 12 கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அமமுக கூட்டணியில் 8 கட்சிகளும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 5 கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி 160 தொகுதிகளிலும், புதிய நீதிக்கட்சி 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றனர். இது தவிர, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் அரசியல் பேரவை 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள்:
இச்சூழலில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை பிரித்து வழங்கப்பட்டு, அத்தொகுதியில் தேர்தல் மேற்பார்வையாளர்களாக செயல்பட வேண்டும் என்று, கட்சியின் மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கேட்டு தலையாட்டிக்கொண்டு சென்ற அமைச்சர்கள், தற்போது அதற்கு நேர் மாறாக செயல்படுவது தான் அதிமுகவின் முக்கிய பிரச்சனையாக அமைந்துள்ளது.
அதாவது, அமைச்சர்கள் தங்களின் சொந்த தொகுதிகளிலேயே வெற்றி பெறுவது கடினமான நிலை உள்ளது. இதனை புரிந்து கொண்ட அமைச்சர்கள், யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, நாம் முதலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரவும், பகலுமாக, தங்களின் தொகுதியே சுத்தி சுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு இதுவரை பிரச்சாரத்திற்கு செல்லாத அவர், தனது தொகுதியை மட்டும் சுற்றி சுற்றி வருகிறார். கடந்த 2011, 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் பெரிய அளவில் எந்த திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
ALSO READ | சூடுபிடிக்கும் அரசியல் களம்: மதுரையில் மோடி, அரவக்குறிச்சியில் அமித் ஷா இன்று பிரச்சாரம்
மசூதியில் படுத்து உறங்கும் திமுக வேட்பாளர்:
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு முதலில், தனது சொந்த மாவட்டமாக திருப்பூரில் உள்ள தொகுதியை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மறுத்த திமுக தலைமை, எஸ்.பி.வேலுமணி கோட்டையாக திகழ்ந்து வரும் தொண்டாமுத்தூரை கொடுத்தது. இதனை அரை மனதாக பெற்றுக்கொண்ட அவர், தனது நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். ஆனால் என்ன செய்வதென முடிவெடுத்த கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூரில் பிரச்சாரத்தை தொடங்கினார். தனக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட அன்றே பிரச்சாரத்தை தொடங்கிய அவர், இன்று வரை தனது வீட்டிற்கு செல்லாமல், அத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அத்தொகுதியில் மசூதி ஒன்றில் இரவில் படுத்துறங்கும் அவர், காலை 5 மணிக்கே எழுந்து பிரச்சாரத்தை தொடங்கி வருவதாக தெரிகிறது.
வெற்றி பெறும் முனைப்பில் திமுக:
தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மட்டுமின்றி, 234 தொகுதிகளிலும் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறும் நோக்குடன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி, தமிழ்நாடு வேலை தமிழருக்கே, நீட், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ALSO READ | DMK vs AIADMK: ஆ. ராசா 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது
திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன தான் வாக்குறுதிகள் கொடுத்தாலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என்ன தான் பேசினாலும், திமுகவின் மீது தமிழக மக்கள் இன்னும் அதிருப்தியில் தான் உள்ளனர். ஏனென்றால், திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை இன்று வரை தமிழக மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, தினகரன் அலுவலகம் எரிப்பு, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர்கள் விவகாரம், ஆட் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சான்றாக காட்டலாம்.
பாஜகவால் தோல்வியடையும் அதிமுக:
அதே நேரத்தில், தமிழகத்தின் மீது மத்திய அரசு திணிக்கும் மோசமான திட்டங்களும் சொல்லி மாலாது. நீட், புதிய கல்விக்கொள்கை, புதிய வேளாண் சட்டம், காட்டுப்பள்ளி விரிவாக்கம், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால், பாஜகவின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, பாஜகவின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். அதனை உணர்த்து விதமாக தான், புதிய தலைமுறை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி முன் நிற்கிறது.
ALSO READ | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்
தனித்து போட்டியிட்டிருந்தால் அதிமுக வெற்றி:
கடந்த 2016 தேர்தலை போன்று, அதிமுக தனித்து நின்றிருந்தால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்காகவே அதிமுகவிற்கு தமிழக மக்கள் வாக்குகளை குவித்திருப்பார்கள். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், யானை தன் தலையில் மண்ணி அள்ளி போட்டுக்கொள்ளும் என்ற பழமொழிக்கேற்ப, பாஜகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு அதிமுக சென்றுள்ளது என்பதையே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காட்டுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR