மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது...!
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அப்பகுதியை மட்டும் நீக்கி புதிய வரைவு கொள்கையை திருத்தி வெளியிட்டது. வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
ALSO READ | PM KISAN: ஆக., 1 முதல் விவசாயிகளின் கணக்கில் ₹.2000 செலுத்தபடும்!
அதில் கல்வியாளர்கள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார். இந்த கருத்துகளை ஆய்வு செய்ய சுமார் 15 குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இனி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று அழைக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.