குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு 7 மாதம் கழித்து ஜாமீன்

துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கானுக்கு 7 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 25, 2018, 08:12 PM IST
குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு 7 மாதம் கழித்து ஜாமீன்  title=

கடந்த ஆகஸ்ட் மாதம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக் குறையால் கிட்டத்தட்ட 70-க்கு மேற்ப்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் பணத்தை சரியான நேரத்தில் செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை தனியார் நிறுவனம் நிறுத்தியது.

இந்நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு பலமுறை அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால் தனியார் நிறுவனம் பணம் செலுத்தினால் மட்டுமே ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடியும் என கூறியுள்ளது.

ஆனால், காபீல் கான் பின் வாங்கவில்லை. தன்னுடைய பணத்தை செலவழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்துள்ளார். இதன்மூலம் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார். காபீல் கான் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் டாக்டர் கபீல்கான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏறக்குறைய 7 மாதங்களில் ஆறு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்நிலையில், கபீல்கானின் மனைவி டாக்டர் சபிஸ்டா கான், எனது கணவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இன்று கபீல்கான் ஜாமீன் மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, டாக்டர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

Trending News