மார்கழி 30-ஆம் நாள்: திருப்பாவை 30-வது பாடலின் பொருள்!

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.....

Last Updated : Jan 14, 2019, 07:00 AM IST
மார்கழி 30-ஆம் நாள்: திருப்பாவை 30-வது பாடலின் பொருள்! title=

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.....

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

திருப்பாவை 30-வது பாடல்:-

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் 

பொருள்: கப்பல்கள் உடைய கடலினைக் கடந்து தேவர்கள் அமுதம் பெறுவதற்கு வழிவகுத்த மாதவனை, கேசி என்ற அரக்கனை அழித்த கண்ணபிரானை, சந்திரன் போன்று அழகிய முகத்தினையும் செம்மையான ஆடைகளையும் உடைய ஆயர் குலத்துச் சிறுமிகள் சென்றடைந்து அவனை வேண்டிப் பறை கொண்ட தன்மையை, அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும், பசுமையும் குளிர்ச்சியும் உடைய தாமரை மலர்களால் புனையப்பட்ட மாலையினை உடையவளும் பெரியாழ்வார் என்று அழைக்கப்படும் பட்டர்பிரானின் மகளுமாகிய ஆண்டாள் அருளிச்செய்த இந்த முப்பது பாடல்களைக் கொண்ட பாசுரத்தை, சங்கத் தமிழ் மாலையை, தப்பாமல் ஓதுவார்கள், பெரிய மலை போன்ற நான்கு தோள்களை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், ஒப்பற்ற செல்வதை உடையவனும் ஆகிய திருமாலின் அருளினால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வினில் இன்பங்களை அடைவார்கள்

விளக்கம்: இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன் கூறப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர் குலச் சிறுமியாக உருவகித்துக்கொண்டு பாடிய பாடல்கள் என்ற விவரம் இந்த பாடலில் தெரிவிக்கப்படுகின்றது.  

 

Trending News