CWG_2018: இந்தியாவிற்கு 26 தங்கம் உட்பட மொத்தம் 66 பதக்கம்!

காமன்வெல்த்-2018 போட்டிகளில் 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை பெற்று இந்தியா 3-வது இடத்தில் உள்ளது..! 

Last Updated : Apr 15, 2018, 02:09 PM IST
CWG_2018: இந்தியாவிற்கு 26 தங்கம் உட்பட மொத்தம் 66 பதக்கம்!  title=

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. 10-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது.

கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் பதக்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கம். பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் இன்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் - சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் - மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இந்தியாவின் சிறந்த நிலையாகும். அதாவது 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது அதிகமான தங்கப்பதக்கத்தை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறிடுள்ளது குறிப்பிடத்தக்கது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது..!

Trending News