மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!
மின்சாரம், ஹைபிரிட் இயந்தியங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக சுமார் ரூ.9,400 கோடி ஒதுக்குவதற்கான வரைவு திட்டத்தையும் மத்திய அரசு தயாரித்துள்ளதாக தெரிகிறது.
மாசு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி மின்சார வாகனங்களுக்கு அதிகப்படியாக ரூ.2.5 லட்சம் வரை மானிய உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதேப்போல் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.30 ஆயிரம் வரையில் மானிய உதவி கிடைக்க இந்த வரைவு திட்டத்தில் வழிவகுக்கும் என தெரிகிறது.
உயர் வேகத்தில் இயக்கப்படும் 2 சக்கர வாகனங்களின் அதிகபட்ச விலை ரூ.1.5 லட்சமாக இருந்தால் அதற்கு ரூ.30 ஆயிரமும், குறைவான வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரமும் மானியம் வழங்கப்படும் என தெரிகிறது.
அதேவேலையில் ஆட்டோ ரிக்ஷாகளுக்கு ரூ.75 ஆயிரமும், கார்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலும் பஸ்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களின் அதிகபட்ச விலை ரூ.2 கோடியாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு ரூ.50 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த வரைவுத் திட்டம் வகை செய்யும் என தெரிகிறது.