கர்நாடகா உடனே 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: தமிழக அரசு மனு

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் இன்று உச்சநீதிமன்றம் மனு தாக்கல்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2018, 02:11 PM IST
கர்நாடகா உடனே 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: தமிழக அரசு மனு title=

கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு மனுவாக தாக்கல் செய்தது. 

இந்நிலையில் கடந்த மே 3 அன்று, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கர்நாடகா தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால், காவிரி தொடர்பான வரைவுத்திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்டது. ஆனால் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரவினை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை வரும் மே 8-ஆம் நாள் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

நாளை இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இன்று "கர்நாடகாவில் மழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லை. ஏற்கனவே தமிழகத்திற்கு கூடுதலாகவே தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். தற்போது உள்ள நிலைமையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது" என கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கர்நாடகாவின் மனு தாக்கல் செய்ததை அடுத்து, தமிழக அரசு சார்பில் இன்று உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். அதேவேளையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Trending News