பாராளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கான கலப்பு வளாகத்தை மறுவடிவமைக்கும் அரசாங்கத்தின் மெகா திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடம், ஜனாதிபதி மாளிகை, வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள், 'இந்தியா கேட்' ஆகியவை, 1911 முதல், 1931 காலகட்டத்தில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவை.
தற்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, துறைகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து, பாராளுமன்ற கட்டடத்தை மறுசீரமைக்க அல்லது புதிய கட்டிடத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கி, 2022-ஆம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டடம் உருவாக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் தலைமை செயலக அலுவலகங்களுக்கான புதிய கட்டடம், 2024-ல் முடிவடையும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செய்து வருகிறது. புதிய கட்டடம் கட்டவும், தற்போதுள்ள கட்டடத்தை மறுசீரமைப்பு செய்யவும், சர்வதேச அளவிலான கட்டட வடிவமைப்பு நிறுவனங்களிடம், திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக தற்போது பாராளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கான கலப்பு வளாகத்தை மறுவடிவமைக்கும் அரசாங்கத்தின் மெகா திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.