ITR Filing: வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு இது முக்கியமான நேரமாகும். 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. ஆகையால் பெரும்பாலானோர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்யத் தொடங்கி விட்டனர். கடைசி தேதிக்கு பிறகு தாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் தேவையில்லாத சிக்கல்களை சந்திக்க நேரிடலம. ஆகையால், வரி செலுத்துவோர் (Taxpayers) விரைவில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும்.
வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முக்கியமாக கணக்கு தணிக்கை தேவையில்லாத வரி செலுத்துவோருக்கு பொருந்தும். ITR ஐ தாக்கல் செய்வதற்கான தளம் என்ன? இதற்கு ஆகும் செலவு எவ்வளவு? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வருமான வரி கணக்கை எப்படி தாக்கல் செய்வது?
- வரி செலுத்துவோர் தாமாக வருமான வரித்துறையின் போர்டல் மூலம் தாக்கல் செய்யலாம்
- பட்டய கணக்காளர்கள் அதாவது சார்டர்ட் அகௌண்டண்டுகள் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்
- மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் மூலம் தாக்கல் செய்யலாம்
வருமான வரித்துறையின் போர்டல் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Website)
வருமான வரித் துறையின் (Income Tax Department) இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி. வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி இந்த இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். இது முன் வரையறுக்கப்பட்ட டெம்ப்ளேட் மற்றும் மெனு அடிப்படையிலான செயல்முறையைக் கொண்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதை எக்ஸ்எம்எல் ஃபைல் (XML File) மூலம் சமர்ப்பிக்கலாம். ஃபிசிக்கல் கையொப்பம், ஆதார் அங்கீகாரம், டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ஆன்லைன் வங்கிச் சரிபார்ப்பு மூலம் வருமான வரி கணக்கை வெரிஃபை செய்யலாம்.
பட்டய கணக்காளர்கள் (CAs) மூலம் தாக்கல் செய்தல் (Chartered Accountants)
வரி செலுத்துவோர் பலர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்ய பட்டய கணக்காளர்களின் உதவியை நாடுகின்றனர். பட்டய கணக்காளர்கள் பொதுவாக முழு செயல்முறையையும் கையாளுகின்றனர். அதாவது, அவர்கள் படிவம் 16 மற்றும் படிவம் 26AS போன்ற ஆவணங்களின் அடிப்படையில் சமர்ப்பிப்பதற்கான வருமானத்தை தயார் செய்கிறார்கள். இதுபோன்ற சேவைகளுக்கு வழக்கமாக ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை செலவாகும் என சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் பயன்பாடு (Third Party Websites)
பட்டய கணக்காளர்களைத் தவிர், வரி செலுத்துவோர் ClearTax, Tax2Win, TaxBuddy, Quicko போன்ற ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தியும் வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்யலாம். இந்த தளங்கள் பயனர்களுக்கு எளிய இடைமுகத்தை வழங்குவதோடு, வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் செயல்முறைக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகின்றன. இந்த தளங்களில் ஆகும் செலவு பொதுவாக குறைவாகவே இருக்கும். இவற்றை பயன்படுத்தி ITR தாக்கல் செய்ய, பொதுவாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலவாகும். சிறப்பு சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி கணக்கு தாக்கல்
வருமான வரி கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது மிக அவசியமாகும். காலக்கெடுவிற்குள் உங்கள் வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்தால், நீங்கள் வரிச் சட்டங்களுக்கு இணங்குவது மட்டுமல்லாமல், அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். ஆகையால் வரி செலுத்துவோர் அனைவரும், வருமான வரியை எவ்வாறு தாக்கல் செய்யப்போகிறோம் என்ற புரிதலோடு, அதற்கான ஆவணங்களை தயாராக வைத்து, சரியான நேரத்தில் சரியான முறையில் ITR -ஐத் தாக்கல் செய்வது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ