Amul Milk Price Hike: பால் என்பது இன்று இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்துக்களை பெற பால் ஒரு உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கும் சரி, வணிகம் சார்ந்த உபயோகத்திற்கும் சரி பால் உற்பத்தி சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. புயல் போன்ற இயற்கை பேரிடரின் போது கூட பால் மட்டும் இருந்தாலே போதும் என மக்கள், பாக்கெட் பாலுக்கு முட்டி மோதிய சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அந்தளவிற்கு பால் முக்கியத்துவம் பெறுவதால், பல்வேறு மாநில அரசுகள் சார்ந்த கூட்டமைப்புகள் அவரவர் மாநிலங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பால் விற்பனையை மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமான பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது எனலாம். தனியார் பால் நிறுவனங்களை காட்டிலும் பால் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பையும் சமமாக பலனளிக்கும் வகையில் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படும்.
அமுல் பால் உயர்வு
அந்த வகையில், குஜராத் மாநிலம் முழுவதும், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (GCMMF) அமுல் என்ற பால் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குஜராத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அமுல் நிறுவனம் சார்ந்த பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அமுல் நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் கூட சில அணிகளுக்கு ஸ்பான்சராக உள்ளது. அந்தளவிற்கு அமுல் நிறுவனம் லாபகரமாக இயங்கி வருகிறது எனலாம்.
அந்த வகையில், குஜராத் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது இன்று முதல் (ஜூன் 3) நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமுல் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட பால் விலையை அதன் முகவர்களுக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், பால் விலை உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட அமுல், விலை 3-4 சதவீதமே உயர்த்தப்பட்டுள்ளது எனவும் உணவு சார்ந்த பணவீக்கத்தின் அளவை விட இது மிக மிக குறைவு என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இப்போது 1 லிட்டர் பால் எவ்வளவு?
இந்த விலை உயர்வு அமுல் பாலின் அனைத்து வகைமைகளிலும் வழக்கத்திற்கு வந்துள்ளது. அமுல் கோல்ட், அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் பால் என அனைத்தும் லிட்டருக்கு 2 ரூபாய் உய்ர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமுல் கோல்ட் இப்போது லிட்டருக்கு 66 ரூபாய்க்கும், அமுல் டீ ஸ்பெஷல் பால் தற்போது லிட்டருக்கு 64 ரூபாய்க்கும், அமுல் சக்தியின் விலை லிட்டருக்கு 62 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பால் மட்டுமின்றி அமுல் தயிரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அமுல் கோல்ட் அரை லிட்டர் (500ml) பாக்கெட் 32 ரூபாய்க்கும், அமுல் ஸ்டாண்டட் அரை லிட்டர் பாக்கெட் 29 ரூபாய்க்கும், அமுல் டாஸா அரை லிட்டர் பாக்கெட் 26 ரூபாய்க்கும், அமுல் டீ ஸ்பெஷல் அரை லிட்டர் பாக்கெட் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் சுமார் 15 மாதங்களுக்கு பிறகு அமுல் அதன் பால் விலையை உயர்த்திருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குஜராத்தில் அமுல் லிட்டருக்கு 2 ரூபாய் விலையை உயர்த்தியது. அகமதாபாத், காந்திநகர் மற்றும் சௌராஷ்டிரா சந்தைகளில் தற்போதைய விலை உயர்வு வழக்கத்திற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அமுல் இந்த பால் விலை உயர்வு குறித்து மேலும் கூறுகையில்,"பால் உற்பத்தியில் ஒட்டுமொத்த இயக்கச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது. எங்கள் உறுப்பினர் சங்கங்களும் கடந்த ஓராண்டில் விவசாயிகளுக்கான பங்கில் சுமார் 6-8% உயர்த்தியுள்ளன.
அமுல் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களுக்காக நுகர்வோர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயில் கிட்டத்தட்ட 80 பைசாவை பால் உற்பத்தியாளர்களுக்கு அனுப்பும் ஒரு கொள்கையை வைத்துள்ளது. இந்த விலை உயர்வானது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான பால் விலையை தொடர்ந்து அளிக்கவும், அதிக பால் உற்பத்திக்கு அவர்களை ஊக்குவிக்கவும் உதவும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்...
அமுல் பாலின் விலை உயர்வு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஒருநாள் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப். 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தற்போதைய அமுலின் இந்த பால் விலை உயர்வால் மற்ற நிறுவனங்களும் தங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ